search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #ThoothukudiFiring #EdappadiPalaniswami
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது பற்றியும் கல்வித் தகுதி குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது.

    அதன் அடிப்படையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்கள் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் (கூடுதல் பொறுப்பு) செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி, பொதுத்துறை துணை செயலாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #ThoothukudiFiring #EdappadiPalaniswami
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiIncident #HighCourt
    மதுரை:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

    இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகபதிவு செய்யப்பட்டுள்ள 243 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்ற கோரி இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.

    மேலும், தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வீடியோ மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. #Thoothukudi #ThoothukudiIncident #HighCourt
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கேட்ட மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தடியடியில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 15 பேர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், துப்பாக்கி சூடு, வன்முறை குறித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மை நிலை வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால் தான் வழக்கின் உண்மை நிலை தெரியவரும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

    எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு உள்ளதாகவும் அந்த வழக்குடன் இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHighCourt
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்களும் இன்று பிற்பகலுக்குள் மறு பிரேதபரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #ThoothukudiFiring #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேரில் 7 பேர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அந்த உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி கலவரத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி மறு பிரேதபரிசோதனை இன்று மதியம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர், தமிழக மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்வார்கள்.

    மாஜிஸ்திரேட் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை ஆணைய சிறப்புக்குழு வந்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஒருநபர் விசாரணை கமி‌ஷனுக்கான அலுவலகம் தயார் நிலையில் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அரசு அறிவித்தபடி நாளை திறக்கப்படும். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #SandeepNanduri
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Rajinikanth #ThoothukudiFiring
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி நேற்று தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய அளவில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறு தல் கூறி, நிதி உதவியையும் அளித்த பிறகு தூத்துக்குடியிலும், சென்னையிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ஆவேசமாக காணப்பட்டார்.

    ரஜினி கூறுகையில், “தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கு வி‌ஷக் கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம். போலீசார் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது.

    போலீசை தாக்கியவர்கள், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சமூக விரோதிகள்தான். இப்படி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்துக்கு பரவலாக கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தோன்றியுள்ளது. நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு, நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வாழ்வாதாரத்தையே இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் சுற்றுப் பகுதி மக்களுக்கு ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கள் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. “ஆறுதல் சொல்ல வந்தவர் ஏன் இப்படி எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்?” என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

    ரஜினி ரசிகர்களும், ரஜினி மன்றத்தினரும் கூட “சமூக விரோதிகள்” என்ற பேச்சில் உடன்பாடு இல்லாமல் தவிக்கிறார்கள். ரஜினியின் கருத்துக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    குறிப்பாக தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும் என்ற ரஜினியின் ஆவேசவார்த்தை ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் சாமானிய மக்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாறி உள்ளது. மக்களின் இத்தகைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரஜினி தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ரஜினியை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், “போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெற, போராட்டம் மூலம் தானே தீர்வு காணப்பட்டது. இது ரஜினிக்கு தெரியாதா? அவர் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்ட ரஜினி தயாரா?” என்றார்.



    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், “வாழ்க்கையே போராட்டம் தானே. போராட வேண்டிய சூழ்நிலை உருவானால் போராடி தானே ஆக வேண்டும். ரஜினியே போராட வேண்டும் என்றுதானே புத்தாண்டு வாழ்த்தில் சொன்னார். இப்போது சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டாவிட்டால் ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “எங்கள் போராட்டத்தை தடுக்க நினைத்தால் எரிமலை வெடிக்கும். போராட்டம் பற்றிய எந்த அரிச்சுவடியும் ரஜினிக்கு தெரியாது. தமிழகம் சுடுகாடாக மாறாமல் இருக்கவே போராட்டம் நடத்தி வருகிறோம். புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினி இது தெரியாமல் பேசி, கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளார்” என்றார்.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்வது வி‌ஷம கருத்து. தன்னெழுச்சியாக நடந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் ரஜினி பா.ஜ.க. வின் குரலை எதிரொலித்துள்ளார். பாசிச சக்திகளின் ஏஜெண்டு போல செயல்படும் நடிகர் ரஜினி காந்தை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.


    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ரஜினியின் குரல் கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது. சில மதவாத சக்திகளும் இதில் ரஜினிக்கு யோசனை கூறி இருக்கலாம். மக்கள் போராட்டம் நடத்தியபோது களத்துக்கு போகாத ரஜினி, இப்போது அங்கு சென்று சமூக விரோதிகள் என்கிறார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசும் ரஜினி நிதானம் இழந்துள்ளார்.

    இமயமலைக்கு சென்று தியானம் இருக்கும் பாவாவின் சீடரான அவர் ஒரு சாதாரண கேள்விக்கு உணர்ச்சிவசப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. சமூக விரோதிகள் என்று சொன்னதன் மூலம் அவர் தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தி உள்ளார். அவருக்கு இருந்த நன்மதிப்பு போய் விட்டது” என்று கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் நடந்தது மண்ணுக்கான போராட்டம். சிறுவர் - சிறுமிகள் கூட போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் சமூக விரோதிகள் என்றால் குடும்பத்தோடா களத்துக்கு வருவார்கள்? மக்கள் இப்படி போராடினால் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம்.

    ஸ்டெர்லைட் போராட்டம் பொழுதுபோக்குக்காக நடக்கவில்லை. கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்று மாமேதை அம்பேத்காரே கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ, போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற போலீசுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பது ஏன்? போராடுபவர்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாதீர்கள். அவரது இந்த அதிகார குரல் வெட்கக்கேடான குரல்” என்று கூறியுள்ளார்.

    அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி திரை உலகப் பிரமுகர்களும் ரஜினியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் அமீர் கூறுகையில், “ரஜினி ஆவேசப்பட வேண்டியதில்லை. தன்னை பா.ஜ.க. என்று சொல்லி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்” என்று கூறியுள்ளார்.

    நடிகர் மயில்சாமி கூறுகையில், “தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டம் சுதந்திர போராட்டம் மாதிரிதான். அதை வரவேற்காமல் ரஜினி கொச்சைப்படுத்தி விட்டார்” என்றார்.

    ரஜினிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்களும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்கள் ரஜினிக்கு எதிரான தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியபடி உள்ளனர்.


    இதையடுத்து ரஜினிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். நேற்றிரவே ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    கதீட்ரல் சாலையில் இருந்து ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு திரும்பும் வழியில் சுமார் 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல ரஜினி வீட்டுக்கு திரும்பும் மற்றொரு வழியிலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.  ரஜினியின் வீட்டு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினி வீட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #ThoothukudiFiring 
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. #ThoothukudiFiring #PoliceFiringReport
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை தொடங்கியதும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இதுவரை நடந்த 7 பேரின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். #ThoothukudiFiring #PoliceFiringReport
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கன்னியாகுமரியில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை கிராமங்களிலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இதில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராஜ் மற்றும் ஆல்பின், ஜான்மில்டன், சேவியர், சிலுவை தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராஜாக்கமங்கலம்துறை பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், மணக்குடி பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.#SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.#SterliteProtest
    கோவை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இதில் 13 பேர் பலியானார்கள். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் மறியலும் நடைபெற்றது.கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் முன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்சை மறித்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பொங்கலூர் பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட பொருளாளர் நாச்சி முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், கார்த்திக் செல்வராஜ், வக்கீல் மகுடபதி, மயில் வாகனம், முருகவேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் 4 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் வடகோவை மேம்பாலம் கிராஸ்கட் ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் வீரகோபால், இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர்கள் உதயகுமார், புதூர் மணி மற்றும் மூ.ரா. செல்வராஜ், கோவை லோகு மீனா லோகு, சண்முக சுந்தரம், சரஸ்வதி, கண்ணப்பன், கிருஷ்ண மூர்த்தி, உசேன், மனோகர், கேபிள் மணி, தினேஷ், காளிமுத்து, கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.#SterliteProtest
    மதுரையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு பதவி விலக வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை கலைத்து விட்டு பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகே இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்றவர்கள், முதல்-அமைச்சர் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அதனை பறித்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர். தூத்துக்குடி சம்பவத்திற்கு காரணமான கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    சாலையில் அமர்ந்து கோ‌ஷமிட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர்.

    இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, தலைவர் வேல் தேவர், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராஜேசு வரி உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர். #Tamilnews
    தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த 8 போலீசாருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், கலவரத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர்களை சிகிச்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    அங்கு முதல்நாள் 43 போலீசாரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்சங்கர் என்ற ஒரு போலீஸ்காரர் மட்டும் பாளை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதில் மறுநாளே 20 போலீசார் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதிலும் நேற்று பெரும்பாலான போலீசார் சிகிச்சை முடிந்து திரும்பினர். இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 போலீசார் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபோல புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளியைச் சேர்ந்த சுகுமார் (21) என்பவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    கோவை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், சிவானந்தாகாலனி, 100 அடி ரோடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பெரியநாயக்கன்பாளையம், பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகே ஓட்டல்கள், மருந்தகங்கள், தள்ளுவண்டி கடைகள் மட்டும் திறந்திருந்தன. எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் மார்க்கெட்டுகளில் கடைகள் திறந்திருந்தன.

    முழுஅடைப்பு போராட்டத்துக்கு கோவை பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் ஊரக தொழில் முனைவோர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.

    முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. காலை 8 மணி நிலவரப்பட்டி கோவை மாநகரில் 543 பஸ்களும், புறநகர் பகுதிகளில் 464 பஸ்களும் வழக்கம் போல ஓடின.

    கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. கேரளாவில் இருந்தும் கோவைக்கு பஸ்கள் வந்தன. 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி ஆதரவு தெரிவித்திருந்தன. கோவையில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதேபோல வேன்களும் இயக்கப்படவில்லை.#tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Thoothukudipolicefiring #Lankaprotest
    கொழும்பு:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது தூத்துக்குடி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், 13 உயிர்களை பறித்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசு மற்றும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான முழக்கங்களுடன் ஏராளமான ஆண்களும், பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    மேலும், இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பை சேந்தவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தலைமை தூதருக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

    17 வயது இளம்பெண் உள்பட 13 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு தங்களது எதிர்ப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் பதிவு செய்யுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Thoothukudipolicefiring #Lankaprotest 
    ×